ஹசாரிபாக் : ஜார்கண்ட் மாநிலத்தில் இரு சக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், கிணற்றில் கார் விழுந்து பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டம் பத்ம ரோமி பகுதியில் உள்ள சாலையில் பொலிரோ கார் சென்று கொண்டு இருந்து உள்ளது. அப்போது அதே வழியாக புல்லட் இரு சக்கர வாகனம் எதிரே வந்து உள்ளது. இதில் எதிர்பாராத விதமாக கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த காரை நிறுத்த ஒட்டுநர் முயற்சித்த போது, நிற்காமல் அருகில் இருந்த கினற்றுக்குள் விழுந்து உள்ளது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த பெண், குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கிணற்றுக்குள் கிடந்த 6 பேரின் சடலங்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து கிணற்றுக்குள் கிடந்த இரண்டு பேரை மீட்ட போலீசார், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் தெரிய வராத நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கார், இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி குழந்தை, பெண், நான்கு ஆண்கள் என மொத்தம் 6 பேர் காருடன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கார், இரு சக்கர வாகனங்கள், கனரக லாரி ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். கிராவல் ஏற்றிச் சென்ற கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து கார்கள், இரு சக்கர வாகனங்கள் என அடுத்தடுத்து முட்டி மோதியதே இந்த விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : பாஜகவில் அதிரடி மாற்றம்... 2024 நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி! பரபரப்படையும் தேர்தல் களம்!