பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, 'முதலமைச்சர் பதவி' நியமனத்தில் கடும் இழுபறி ஏற்பட்ட நிலையில், கட்சி மேலிடம் சித்தராமையாவை முதலமைச்சராக (CM Of karnataka Siddaramaiah) அறிவித்தது. அத்துடன், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
நேற்று (மே 20) நடைபெற்ற விழாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று கொண்டது. கூடவே, பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமதுகான் ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இந்த நிலையில் மொத்தமுள்ள 10 அமைச்சர்களில், 9 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு (ADR) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மூலம் இத்தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்டுள்ள இன்று (மே 21) அறிக்கையில், "9 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 4 அமைச்சர்கள் மீதான வழக்கு, மிகவும் தீவிர குற்ற வழக்குகள் ஆகும். ஆனால், அமைச்சர் ஜார்ஜ் மீதான வழக்கு விவரம் கிடைக்கவில்லை. வழக்குகள் உள்ள 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள் ஆவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் தலைவிரித்தாடிய திமுக உட்கட்சிப் பூசல்; அதிரடி நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை - முழுப் பின்னணி!
9 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.229.27 கோடி எனக் கூறப்படுகிறது. தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களில் அதிக சொத்துக்களை கொண்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் துணை முதலமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் தான். அவர் தனக்கு ரூ.1,413.80 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். குறைந்த சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆவார். இவருக்கு ரூ.16.83 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். அதேபோல், 9 அமைச்சர்களில் அதிக கடன் இருக்கும் அமைச்சர் டி.கே.சிவகுமார் தான். தனக்கு ரூ.265.06 கோடி கடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 3 அமைச்சர்கள் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். எனினும் 6 அமைச்சர்கள் பட்டப்படிப்பு படித்துள்ளதும் தெரியவந்துள்ளது. 5 அமைச்சர்களின் வயது 41 முதல் 60 வயதுக்குள்ளும், 4 பேரின் வயது 61 முதல் 80 வயதுக்கு இடையிலும் இருப்பதாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.