ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.28) அதிகாலை, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, வேன் மீது நேருக்கு நேர் மோதியது. புஜ்ஜிரெட்டிபாலம் பகுதியில் இருக்கும் தாமரமடுகு என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் வேனில் பயணித்த 14 பேரில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த நபரை முதலில் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அந்நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த எட்டு பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற 6 நபர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அனைவரும் ஸ்ரீசைலத்திலிருந்து நெல்லூருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஐவர் பெண்கள், மூவர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.