பெங்களூரு: மகாராஷ்டிரா மாநிலம் புல்தான் மாவட்டம் மெஹ்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முரளிதர் ராவ் குல்கர்னி. இவர் 58 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த எருமை மாடுகளில் இரண்டையும், அதன் கன்று ஒன்றையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனை அடுத்து மெஹ்கர் காவல் நிலையத்தில் முரளிதர் ராவ் குல்கர்னி கடந்த 1965ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நுஹ் வன்முறை; பசு பாதுகாவலர் மோனு மனேசர் கைது - 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிப்பு!
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மெஹ்கர் போலீஸார், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கின் குற்றவாளிகளான மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதி அடுத்த உதகிர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கிஷான் சந்தர் மற்றும் 20 வயதான கணபதி வாக்மோர் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீன் பெற்று வெளியே சென்ற நிலையில், இருவரும் தலைமறைவானதுடன், கைது செய்ய உத்தரவிட்ட பின்னரும் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்த முடியாமல் போலீஸார் திணறியுள்ளனர். பின்னர், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கிஷான் உயிரிழந்த நிலையில், அவர் மீதான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க: தெலுங்கானாவில் அரசு பேருந்தை கடத்திய திருடன் - டீசல் தீர்ந்து போனதால் பேருந்தை நடுவழியில் விட்டு ஓட்டம்!
அதேநேரத்தில், இரண்டாவது குற்றவாளியான கணபதி என்பவர் போலீஸார் கண்ணில் மண்ணை தூவி விட்டு 58 வருடங்களாகக் கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநில போலீஸாரின் உதவியுடன் மகாராஷ்டிரா போலீஸார் கணபதியைக் கைது செய்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கும்போது 20 வயதாக இருந்த கணபதிக்கு தற்போது 78 வயதாகும் நிலையில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
நீண்ட நாள் கிடப்பில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய வழக்குகள் தோண்டி எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வழக்கும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட கணபதியை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்த உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற உறவினர்கள் - ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் நேர்ந்த அவலம்.!