டெல்லி: நாட்டின் 76-வது சுதந்திர தினம், மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கிற டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த மோடி, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார். நாடு புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, “புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள் இது. மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், வீர் சாவர்க்கர் போன்ற, கடமைப் பாதையில் தங்கள் இன்னுயிரை நீத்த குடிமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருனம் இது.
ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஸ்ரத் மஹால் என இந்தியப் பெண்களின் வலிமையை நினைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியாவும் பெருமிதம் கொள்கிறது. மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற ஆங்கிலேயர் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இதன் வாயிலாக நன்றி கூறுவோம்.
கடந்த 75 ஆண்டுகளில் நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு பங்களித்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூரும் நாள் இன்று. சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இது. அத்தகைய சிறந்த ஆளுமைகளின் முன் தலைவணங்கவும்.
75 ஆண்டு கால பயணத்தில் இந்தியா தனக்கு ஒரு விலைமதிப்பற்ற திறன் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது மற்றும் பல சவால்களை எதிர்கொண்டது. நம் நாட்டு மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர், கைவிடவில்லை. தங்கள் உறுதிகளை மங்க விடவில்லை.
நாம் சுதந்திரம் அடைந்தபோது, நமது வளர்ச்சிப் பாதையில் பல சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் சிறப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தியா லட்சியங்கள் நிறைந்த சமூகம். இந்திய மக்கள் நேர்மறையான மாற்றங்களை விரும்புவதோடு, அதற்கு பங்களிக்கவும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு அரசாங்கமும் இந்த லட்சிய சமுதாயத்திற்கு தீர்வு காண வேண்டும்.
இந்த 75 ஆண்டு பயணத்தில், நம்பிக்கைகள், லட்சியம் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு மத்தியில் அனைவரின் முயற்சியால், நமது இடத்தை அடைந்தோம். 2014-ல், குடிமக்கள் எனக்கு பொறுப்பை வழங்கினர். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் நபர், செங்கோட்டையில் இருந்து இந்த நாட்டின் குடிமக்களைப் புகழ்ந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரம். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகள் ஏற்க வேண்டும் வேண்டும்.
முதல் உறுதிமொழியாக இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக உருவாக வேண்டும். இதற்காக நாட்டின் இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும்.
இரண்டாவது உறுதிமொழியாக நம்மிடம் இருக்கும் காலனி ஆதிக்க அடிமை மனோபாவத்தை நாம் முற்றிலுமாக அழிக்க வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் நாம் உலகின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க கூடாது. நாம் நமது நாட்டின் பெருமையை உணர வேண்டும். சிலர் தங்களின் திறமைக்கு மொழியை தடையாக உணரலாம். ஆனால், நாம் நமது அனைத்து மொழிகளையும் பெருமையாக கொள்ள வேண்டும்.
மூன்றாவது உறுதி மொழியாக, நாம் நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொள்ள வேண்டும். நமது வேர்களின் மீது உறுதியான தொடர்பு வைத்திருந்தால் தான் நாம் உயர பறக்க முடியும். நாம் உயர பறந்தால் நாம் உலகிற்கே வழிகாட்டியாக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்க முடியும்.
நான்காவதாக நாட்டு மக்களிடையே ஒற்றுமை என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். நம் நாடு தான் முதன்மை என்ற மந்திரத்தை நாம் மனதில் கொண்டு ஒற்றுமையோடு முன்னேற வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு உரிய முக்கியத்துவம், மரியாதை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கு பெண் சக்தியை முக்கிய தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஐந்தாவது உறுதி மொழியாக குடிமக்களின் கடமை என்பதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும். கடமை என்பது சாதாரண மக்கள் என்று அல்லாமல் பிரதமர், முதலமைச்சர் என நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும். எந்தவொரு நாடும் கடமையை பின்பற்றும் ஒழுக்கமான குடிமக்கள் மூலமாகத் தான் வளர்ச்சி அடையும். உதாரணமாக நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம், நீர் வழங்குவது ஆட்சியாளர்களின் கடமை. அதேபோல், இவற்றை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தி சேமித்து வைப்பது குடிமக்களின் கடமை. இதை முறையாக செய்தால் நாம் எதிர்பார்க்கும் இலக்குகளை எளிதாக எட்ட முடியும்.
இத்தகைய உறுதிமொழிகளை நாம் கடைபிடித்தால், நிச்சயமாக இந்தியா எப்போதும் முதல் இடத்தை பிடிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை பெண்களே... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு...