ஹைதராபாத் : இந்திய விடுதலை போராட்டம் இவர் பெயர் இடம் பெறாமல் முழுமை பெறாது. அவர்தான், நாட்டின் விடுதலை போராட்டத்தை புரட்டிப் போட்ட புரட்சியாளர் பகத் சிங். ஷாகித் இ ஆசம் சர்தார் பகத் சிங் என்ற இயற்பெயர் கொண்ட பகத் சிங், 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்டார்.
அவருடன் இணைந்து பகத் சிங்கின் நண்பர்களான சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரும் தூக்கு கயிரை முத்தமிட்டார்கள். ஆங்கிலேயர்களால் பகத் சிங்கின் உடலை அழிக்க முடிந்ததே தவிர, அவரின் புரட்சிகர சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்களை தொடக்கூட முடியவில்லை. அது என்றென்றும் அழிவில்லாதது, இளம் வயதில் நாட்டுக்காக உச்சப் பட்ச ஈகம் அளித்த இவர்களுக்கு இன்றுவரை தியாகி பட்டம் அளிக்கப்படவில்லை. ஆனாலும் தனது செயல்கள் வாயிலாக இவர்கள் மக்கள் மனதில் ஆல மரமாக விருட்சமிட்டுள்ளனர்.
பகத் சிங் வாழ்க்கை
இந்திய சுதந்திர போராட்டத்தில் பகத் சிங் சொந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி அயல் நாட்டினருக்கும் இவ்வாறு உத்வேகமாக இருந்தார் என்பதை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வது அவசியம்.
ஆங்கிலேயர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்த இந்த மாவீரன் தற்போதைய பாகிஸ்தானின் பகுதியான லயால்பூர் என்ற இடத்தில் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பிறந்தார். இவரின் குடும்பத்தில் தாத்தா, தந்தை என ஏற்கனவே விடுதலை வீரர்கள் இருந்தனர். இதனால் பகத் சிங்கின் இரத்தத்தில் இயற்கையிலேயே சுதந்திர வேட்கை காணப்பட்டது.
வாழ்க்கையை புரட்டிப் போட்ட 3 காரணிகள்
இந்து மறுமலர்ச்சி இயக்கமான ஆர்ய சமாஜ் இயக்கத்தில் பகத் சிங்கின் தாத்தா அர்ஜான் சிங் அங்கம் வகித்தார். பகத் சிங் தந்தை கிஷான் சிங், மாமா அஜித் சிங் ஆகியோர் காதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தர். இந்திய விடுதலை போராட்டத்தில் மிக முக்கிய அங்கம் வகித்த இயக்கம் காதர் கட்சி. இந்த இயக்கம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது.
பகத் சிங் நாட்டின் விடுதலையை நோக்கி பயணிக்க 3 விஷயங்கள் பெரும் காரணியாக இருந்தன. முதலாவது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த போது பகத் சிங் 12 வயது சிறுவன். அப்போது, பகத் சிங் ஜாலியன் வாலாபாக்கில் இருந்து மண்ணை அள்ளி வந்தார். அடுத்து விடுதலை வீரன் கர்தார் சிங் சரபா ( Kartar Singh Sarabha). நாட்டின் விடுதலைக்காக பெரும் போராட்டங்களை முன்னெடுத்த காதர் இயக்கத்தை சேர்ந்த புரட்சியாளர். இவரின் செயல்பாடுகளால் பகத் சிங் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.
சீக்கிய குரு, குருநானக் போதனைகள்
மூன்றாவதாக ஸ்ரீ குரு கிரந்த் ஷாகிப் போதனைகள். இவரின் போதனைகள் பகத் சிங்குக்கு சுதந்திர தீயை முட்டின. இதற்கிடையில் குரு நானக்கின் போதனைகள் பகத் சிங்குக்கு தன்னம்பிக்கையை ஊட்டின. சீக்கிய குரு, குருநானக்கின் வார்த்தைகளை பகத் சிங் எப்போதும் உச்சரிப்பார். அந்த வார்த்தைகள், “அதிகாரம் என்பது தனிநபராக இருத்தல் கூடாது, உங்களில் ஒருவர் மற்றொருவருக்கு அதிகாரம் அளித்தால், அவரால் அனைத்து அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் சுயமுடன் இருங்கள். யாருடைய ஆதரவையும் பெற வேண்டாம். நீ வலிமையாக இருந்தால் உன்னை நீயே பார்த்துக்கொள்ள முடியும். உன் வேலையை நீயே செய். நீ வலிமையானவன், பலவீனத்தை முறியடித்து முன்னேறு என்பதே ஆகும். பகத் சிங்கின் உறுதிக்கு இந்த வார்த்தைகளும் அடித்தளமிட்டன.
பகத் சிங் மொழிபெயர்த்த நூல்
பகத் சிங் புத்தகங்களைப் படிப்பதிலும், சுதந்திரப் போரை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் புத்தகங்களிலிருந்து கற்றுக்கொண்டார். 1921இல் அயர்லாந்து டே வலேரா (DE VALERA) தேசபக்தர்களின் உதவியுடன் டொமினியன் அந்தஸ்தைப் பெற்றது. இது குறித்த செய்திகளை பகத் சிங் விரும்பி படிப்பார்.
இதற்கிடையில் டான் பெரீன் (DAN BREEN) எழுதிய ஐரிஷ் சுதந்திரத்துக்கான எனது போராட்டம் என்ற நூலை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்தப் புத்தகத்தில் இருந்து பகத் சிங் நிறைய கற்றுக்கொண்டார், இப்புத்தகத்தை வாசிக்கும்பட்சத்தில் நாமும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
பகத் சிங் வாழ்வில் திருப்புமுனை
பொதுவாக உடலைக் கொல்ல முடியும் ஆனால் எண்ணங்களையோ சித்தாந்தங்களையோ அழிக்க இயலாது. இவைகள் அழியாது என்பதற்கிணங்க பகத் சிங், நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டினார். ஏகாதிபத்தியம் ஒழிக, புரட்சி வாழ்க என்ற முழக்கங்கள் ஆங்கிலேயருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தன. அந்நிய சக்திகள் வெகுஜன மக்களின் அதிகாரத்தை திருடும்போது மக்களால் நிம்மதியாக இருக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்தார்.
பகத் சிங்கின் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் திருப்பு முனையை ஏற்படுத்தின. ஒன்று சாண்டர் படுகொலை மற்றொன்று நாடாளுமன்ற தாக்குதல். இதில் முதல் சம்பவம் 1928ஆம் ஆண்டுநடந்தது. அப்போது சைமன் கமிஷன் என்ற 7 பேர் கொண்ட குழு, இந்தியாவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய வந்தது.
சைமன் குழுவுக்கு கறுப்புக்கொடி
அதாவது இந்தியர்களுக்கான பிரிட்டிஷ் கொள்கைகளின் திருத்தங்களை மறுபரிசீலனை செய்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தக் குழுவில் ஒருவர் கூட இந்தியர் அல்ல. இதனால் லாலா லஜபதிராய் தலைமையில் பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் லாகூரில் உள்ள சைமன் கமிஷனுக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.
அமைதியான போராட்டத்தின் மீது போலீசார் தடியடி நடத்தினர். லாலா ஜியின் மரணத்திற்கு பழிவாங்க பாரத நௌஜ்வான் சபா மற்றும் சோசலிஸ்ட் குடியரசு ராணுவத்தின் இளைஞர்கள் முடிவு செய்தனர். இந்தப் படுகொலைக்கு பழி தீர்க்க காவல் அலுவலர் ஸ்காட்-ஐ சுட்டுக் கொல்ல பகத் சிங் நண்பர்கள் திட்டமிட்டனர். இந்தத் தாக்குதலில் ஸ்காட் உயிர் தப்பினார்.
சாண்டர்ஸ் கொலை
மாறாக சாண்டர்ஸ் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பல மாதங்கள் தேடியும் ஆங்கிலேயர்களால் கைது செய்ய இயலவில்லை. பகத் சிங்கின் வாழ்வில் நடந்த இரண்டாவது முக்கிய சம்பவம் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல். இந்தத் தாக்குதலை நடத்த குண்டுகேஷ்வர் தத்தும், பகத் சிங்கும் திட்டமிட்டனர். புரட்சியாளர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் இருந்த காலி இடத்தில் இரண்டு குண்டுகளை வீசினர்.
தொடர்ந்து துண்டு பிரசுரங்களை அள்ளி வீசினர். இது உயிர் சேதம் ஏற்படுத்தாத சப்தம் எழுப்பும் குண்டுகள் தான். ஆனால் இந்தக் குண்டுகள் ஆங்கிலேயர்களின் ஈரக் குலையை நடுங்கச் செய்தன. ஏனெனில் ஆங்கிலேயர்களை கண்டு இருவரும் ஓடவில்லை, கண்கள் தீப்பிழம்பாக எரிமலையை போல் நின்றிருந்தனர். அவர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பகத் சிங் வழக்கு- தூக்குத் தண்டனை
குண்டுவெடிப்பில் உயிரிழப்பு நிகழவில்லை என்பதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை ஆங்கிலேயருக்கு திருப்தியை அளிக்கவில்லை. இருவரையும் தூக்கிலிடவே நினைத்தனர். இதன் காரணமாக ஆங்கிலேயர்கள் ஒரு சதித் திட்டம் தீட்டினர். சாண்டர்ஸ் கொலை வழக்கை தூசி தட்டினர். இந்தக் கொலை வழக்கில் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, மார்ச் 31-ம் தேதி மரணதண்டனைக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டது. இது விவசாயிகள் அறுவடைக்கும், இளைஞர்கள் தேர்வுக்கு தயாராக இருந்த காலம். இக்காலத்திலும் பகத் சிங்கின் தூக்கு தண்டனைக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. ஒரு கட்டத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களைக் கண்டு, ஆங்கிலேயர்கள் அவர்களை மார்ச் 24 அன்று தூக்கிலிட முடிவு செய்தனர்.
பகத் சிங்குக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஆனால் இந்தச் செய்தி அவர்களுடைய குடும்பத்தினருக்கு எட்டியது. தொடர்ந்து, மார்ச் 23 ஆம் தேதி மாலை லாகூர் சிறைக்கு வெளியே ஒரு பெரிய கூட்டம் திரண்டது. அனைத்து நெறிமுறைகளின்படி, மூன்று புரட்சியாளர்களும் மார்ச் 23ஆம் தேதியன்று மாலை தூக்கிலிடப்பட்டனர். எனினும் தியாகிகளின் உடல்கள் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படவில்லை.
மாறாக ஆங்கிலேயர்கள் சிறைச்சாலையின் பின்புற சுவரை உடைத்து, அவர்களின் உடலை எரித்து பாதி எரிந்த நிலையில் சட்லஜ் ஆற்றில் வீசினர். பகத் சிங் மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது எந்த விதமான சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை. பொதுவாக தூக்கு தண்டனை கைதிகள் காலையில் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் மாலை நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
தேசிய தியாகி கோரிக்கை
நாட்டிற்காக இளம் வயதில் உச்சப் பட்ச தியாகமாக உயிரை ஈந்த இம்மூவருக்கும் இதுவரை தேசிய தியாகி அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஷாகித்-இ-ஆசம் பகத் சிங் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் போற்றப்படுகிறார்.
இதையும் படிங்க : பதுங்குக் குழியில் 15 நாள்கள்... பகத் சிங் பதுங்கிய வீடு!