அண்ணல் காந்தியடிகள், பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக ஹரிஜன் சேவா சங்கம் என்ற அமைப்பை 1932இல் உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்கள், கல்வி நிலையங்கள், சாலைகள், நீர் நிலைகள் போன்ற பொது இடங்களை சம உரிமையுடன் பயன்படுத்தும் நிலையை பெற அந்த அமைப்பு போராடியது.
ஹரிஜன் பந்து என அறிப்படும் கிருஷ்ண நாத் சர்மா அஸ்ஸாம் மாநிலத்தில் இதனை தீவிரமாக முன்னெடுத்தார். பிராமண சமூகத்தை சேர்ந்த கிருஷ்ண நாத் சர்மா, காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த இயக்கத்தை ஆத்மார்த்தமாக முன்னெடுத்தார்.
இதன் காரணமாக பிராமண சமூகம் கிருஷ்ணாவை ஒதுக்கிவைத்தது. கிருஷ்ண நாத், 1887 பிப்ரவரி 28ஆம் தேதி அஸ்ஸாமின் சபரிபந்தாவில் பிறந்தார். இவர், பட்டியலின மக்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு சேர்க்க தனது வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டார்.
வழக்கறிஞரான இவர், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து தொழிலை துறந்தார். ஜோர்ஹாட் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக 1921ஆம் ஆண்டு கிருஷ்ண நாத் பொறுப்பேற்றார்.
அதே ஆண்டில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிருஷ்ண நாத், நபின் சந்திரா போர்டோலி, தருண் ராம் பூகான், குலாதார் சலியா ஆகியோர் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காந்தியின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கிய அவர், சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டார். கல்வி நிலையங்களை திறந்தார், மருத்துவமனை, சாலை வசதிகளை போன்றவற்றை உருவாக்கினார்.
தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் இவரின் பங்கு அளப்பறியது. தனது வீட்டின் பூஜை அறைக்குள் பட்டியலின மக்களை அழைத்து சென்று வழிபாடு நடத்தினார். அன்றைய சூழலில் இது மிகவும் சவாலான செயலாகும்.
1934ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கு அண்ணல் காந்தி வருகை தந்த போது, மீண்டும் ஒரு முறை பட்டியலின மக்களுடன் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார். இதுபோன்ற நிகழ்வு அஸ்ஸாமில் நடந்தது அதுவே முதல்முறை.
காந்தியவாதி கிருஷ்ண நாத் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி காலமானார். இவருக்கு இன்று வரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.
ஜோர்ஹாத் மாவட்டத்தில் கிருஷ்ணா நாத் நடத்திய ஆசிரமம் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் இந்த ஆசிரமத்தை புனரமைக்க அஸ்ஸாம் மாநில அரசு இதுவரை எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
இதில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ஆசிரமத்தில் உள்ள கிருஷ்ண நாத் சர்மாவின் நினைவிடமும் மோசமான நிலையில் உள்ளது. கிருஷ்ண நாத் சர்மாவின் புகழை போற்றி பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் பொது மக்களின் தலையாய கடமையாகும்.
இதையும் படிங்க: திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு