டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. தற்போது, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், கரோனாவின் இரண்டாம் அலையில் சுமார் 724 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக வரும் ஜுன் 18ஆம் தேதி, தேசியளவில் போராட்டத்தை நடத்திடத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை
இதுகுறித்து ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறுகையில், "கடந்த இரண்டு வாரங்களில் அஸ்ஸாம், பிகார், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்டப் பல இடங்களில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கவலையளிக்கின்றன. எலும்பு முறிவு, கடுமையான காயங்களுக்கு மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர்.
பெண் மருத்துவர்கள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே, மருத்துவர்களைப் பாதுகாக்க பிரத்யேக சட்டம் கொண்டு வர வேண்டும்.
மருத்துவமனைகளில் பாதுகாப்பு தரத்தை உயர்த்த வேண்டும். இச்சம்பத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனாவின் முதல் அலையில் 748 டாக்டர்கள் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.