பஞ்சாப்: வெளிநாடுகள் சென்று உயர் கல்வி பெறுவதை இந்திய மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலான மாணவர்கள் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கல்வி கற்கச் செல்கின்றனர். நாளடைவில் அந்தந்த நாடுகளில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களில் பணியில் சேரும் மாணவர்கள் நிரந்தர குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகி வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப்பை சேர்ந்த 700 மாணவர்கள் வடஅமெரிக்க நாடான கனடாவிற்கு கல்வி கற்கச் சென்று உள்ளனர். டொரண்டோ நகரில் உள்ள ஹம்பர் கல்லூரியில் 2018-19 கல்வி ஆண்டு அடிப்படையில் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வந்து உள்ளனர். இந்நிலையில், 700 மாணவர்களும் போலி ஆவணங்கள் வழங்கி கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து உடனடியாக 700 பேரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த விசா ஏஜென்ட் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் மூலம் கனடா சென்று உள்ளனர். இந்த 700 மாணவர்களும் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிஜேஷ் மிஸ்ரா மூலம் உயர் கல்விக்காக கனடா சென்று உள்ளனர்.
700 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கனடாவில் உயர்கல்வி படித்த நிலையில், படிப்பு முடிந்த பின்னர் PR எனப்படும் நிரந்தர குடியிருப்பு கேட்டு அந்நாட்டு குடியேற்ற துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களை சோதிக்கும் போது போலி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 700 பேரிடமும், ஏறத்தாழ 16 முதல் 20 லட்ச ரூபாயை பிரஜேஷ் மிஸ்ரா பெற்றதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கிலான ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு பிரிஜேஷ் மிஸ்ரா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஜலந்தர் கிரீன் பார்க் சாலையில் பிரிஜேஷ் மிஸ்ராவின் அலுவலகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக அலுவலகம் பூட்டிக் கிடப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பேசிய துணை காவல் ஆணையர் வத்சலா குப்தா, வெளிநாட்டு கல்வி மோசடி தொடர்பாக எந்த புகார்களும் வரவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். அதேநேரம் போலி ஆவணம் கொடுத்து சிக்கிக் கொண்டதாக கூறப்படும் 700 மாணவர்களும் தங்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சிறுதானிய சந்தை வளர்ச்சியால் 2.5 கோடி விவசாயிகள் பலன் - சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பிரதமர் மோடி!