அயோத்தி : உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அயோத்தியில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து லக்னோ, கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அம்பேத்கர் நகர் பகுதியில் தனியார் பேருந்து திரும்ப முயற்சித்த போது எதிர் திசையில் வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு வாகனங்களும் பலமாக மோதிக் கொண்டதால் லாரி கவிழ்ந்து பேருந்து மீது விழுந்து விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். படுகாயங்களுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து நடந்தது குறித்து தகவல் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்டு 12க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளை கொண்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டதாகவும், இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக உத்தரபிரதேச முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அயோத்தி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு - என்ன நடந்தது?