பெங்களூரு: பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் 'AY 4.2' எனப்படும் புதிய டெல்டா வகை கரோனா தொற்று தற்போது பரவிவருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் இந்தப் புதிய வகை தொற்று ஏழு நபர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் இந்த ஏழு நபர்களிடமும் சேகரிப்பட்ட மாதிரிகளில் 'AY 4.2' மரபணு வரிசைமுறை (Genomic sequencing) காணப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள் தீவிரம்
இந்த ஏழு நபர்களில் மூவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தொற்று கண்டறியப்பட்டவர்களை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தொற்று கண்டறியப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை...
இந்தப் புதிய வகை கரோனா தொற்று அதிகம் பரவக்கூடியது எனவும், குறைவான பாதிப்புடையது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய், இந்தப் புதிய வகை கரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும், தொற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், "பழைய தொற்று வகைக்கும், புதிய வகைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. எனவே, தொடக்கப்பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை" என்றார். முன்னதாக, கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் நேற்று (அக். 25) திறக்கப்பட்டன.
பழைய நடைமுறைகள் தொடரும்
புதிய கரோனா தொற்று வகை குறித்து கர்நாடக சுகாதாரத்துறை ஆணையர் ரன்தீப் கூறுகையில், "பெங்களூருவில் கரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் முந்தைய 'AY 4.1' தொற்று வகை குறித்தான அச்சம் தற்போது இல்லை. 'AY 4.2' தொற்று வகை அதிகரித்தால்தான் தனிமைப்படுத்துதல், பரிசோதனை, நோயத்தடுப்பு போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம்.
ஆனால், தொற்று பாதிப்பும் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நடைமுறையில் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளே தொடரும். 'AY 4.2' தொற்று வகை கண்டறியப்பட்டவர்களில் மூன்று நபர்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். ஏற்கெனவே, அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியவர்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதித்துப் பார்த்ததில் அவர்களிடம் நோய் பரவல் ஏதும் காணப்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா... ஊரடங்கு அமல்...