டெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில், ஆன்லைன் மூலம் போலி மருந்துகளை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் எனக்கூறி ஏராளமான மக்களிடம் போலி மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களின் மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்களும் அடங்குவர்.
இதுகுறித்து பேசிய சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர சிங் யாதவ், "இந்த வழக்கில் மருத்துவர்கள், பொறியாளர்கள், எம்பிஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். உள்நாட்டில் கிடைக்காத மருந்து எனக்கூறி போலி மருந்துகளை விற்பனை செய்துள்ளனர்.
சோனிபட் உள்ளிட்ட இடங்களில் இவர்களது ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் உள்ள ஒரு குடோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு தனி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் மருந்துகளை விற்பனை செய்து வந்தனர். தற்போது பிடிபட்ட போலி மருந்துகளின் மதிப்பு எட்டு கோடி ரூபாய்.
இவர்கள் மூன்று நான்கு வருடங்களாக இத்தகைய வேலையைச் செய்து வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் புற்றுநோயாளிகளின் உதவியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆன்லைனில் மருந்துகளை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டெல்லி பகீரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள மருந்தகங்கள் மூலமாகவும் போலி மருந்துகள் விற்கப்பட்டன.
இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் டாக்டர் பிரதீபா நாராயண் பிரதான், ஷுபம் மன்னா, பங்கஜ் சிங் போஹ்ரா, அங்கித் சர்மா, ராம் குமார், அங்கேஷ் வர்மா பிரபாத் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நேபாளம், பங்களாதேஷ், சீனா போன்ற நாடுகளில் இருப்பவர்களோடு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், இந்த சம்பவத்தில் சர்வதேச கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஆற்றுப்பாலத்தின் கீழ் கிடந்த 185 கிலோ வெடிபொருள்கள்