மானசா: பஞ்சாப் மாநிலம், மானசா மாவட்டம், கோட்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்ப்ரீத் சிங். கடந்த வியாழக்கிழமை இரவு மகன் உதய்வீர் சிங் (6) மற்றும் மகளுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் தான் சிறுவன் உதய்வீர் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஜஸ்ப்ரீத் சிங் தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஜஸ்ப்ரீத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் குறி தவறியதில் குழந்தைகள் இருவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து தாக்குதல் நடத்திய இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜஸ்ப்ரீத், காயம் அடைந்த தனது குழந்தைகளை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் உதய்வீர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அம்ரிக் சிங், சேவாக் சிங், சன்னி ஆகியோர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மூவரும் தம்மை மிரட்டுவதாக ஜஸ்ப்ரீத் சிங் போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது.
கூடுதல் டிஜிபி சுரீந்தர் பால் சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். சிறுவனை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக பதற்றம் நிலவுதால் கோட்லீ பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரில் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெற்றோர் பல்கவுர் சிங் மற்றும் சரஞ்சீத் கவுர் ஆகியோர் ஜஸ்ப்ரீத் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான முறைகேடு வழக்கு - மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு!