திருமலை (ஆந்திரா): ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு உள்ள பாலாஜியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொதிரெட்டிபாலெம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருப்பதிக்கு வந்து உள்ளனர்.
இவர்கள், நேற்று (ஆகஸ்ட் 12) இரவு 8 மணியளவில் அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்று கொண்டிருந்து உள்ளனர். பின்னர், இரவு 11 மணியளவில் லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலை குடும்பத்தினர் அடைந்து உள்ளனர். அப்போது, குடும்பத்துடன் வந்த லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை, திடீரென வந்த சிறுத்தை கொடூரமாக தாக்கி உள்ளது.
அது மட்டுமல்லாமல், கண்ணிமைக்கும் நேரத்தில், குடும்பத்தினரின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், அப்போது இரவு நேரம் என்பதால், சிறுமியை தேடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. பின்னர், இன்று (ஆகஸ்ட் 12) காலையில் சிறுமியின் சடலத்தை காவல் துறையினர் மீட்டு உள்ளனர்.
அப்போது, சிறுமியின் உடலின் பாதி பகுதியை சிறுத்தை தின்றிருந்தது தெரிய வந்து உள்ளது. மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமி தாக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்தால் திருமலைக் கோயில் வந்து விடும் எனவும் தெரிய வந்து உள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பதிக்குச் செல்லும் நடைபாதையில் சிறுவனை சிறுத்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டுவுக்கு நெய் கொடுப்பது யார்? - கர்நாடகாவில் மோதும் பாஜக, காங்கிரஸ்!