சம்பால் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேசம் சம்பால் மாவட்டத்தில் இந்தக் கொடுமையான சம்பவம் அறங்கேறியுள்ளது. ஆறு விவசாயிகள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம் எனக் கூறி ரூ.50 லட்சம் தனிநபர் பத்திரங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம் சம்பால் மாவட்டத்தில் உள்ள விவசாய தலைவர்கள் ஆறு பேருக்கு மாவட்ட துணை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை கருத்தில் கொண்டு ரூ.50 லட்சம் தனிநபர் பத்திரங்கள் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த நோட்டீஸ் பாரதிய கிசான் யூனியன் மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் இதர விவசாய சங்கத் தலைவர்களான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சத்யேந்திரா, ரோஹ்தாஸ் மற்றும் வீர் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு இரு தினங்களை கடந்துள்ள நிலையில், “தனிநபர் பத்திரத்தில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம் என வட்டார அலுவலர் ஒருவர் கூறினார். அவரின் கூற்றுப்படி ரூ.50 ஆயிரம் தவறுதலாக ரூ.50 லட்சமாக மாறியிருக்கும், நாங்கள் இதனை ரூ.50 ஆயிரமாக மாற்றுவோம்” என்றார்.
சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை முழுவதுமாக திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஆறு விவசாயிகளிடத்தில் தலா ரூ.50 லட்சம் தனிநபர் பத்திரங்கள் சமர்ப்பிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வன்புணர்வு வழக்கில் சிக்கிய முதலமைச்சர், காவல் துறைக்கு மகளிர் ஆணையம் கடிதம்