மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷாடோலில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்சிஜன் சப்ளையில் அழுத்தம் குறையத் தொடங்கியுள்ளது. உடனடியாக, வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டாலும், பிரச்சினையைச் சரிசெய்ய இயலவில்லை.
இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 60-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் சப்ளையர்களை மருத்துவமனை நிர்வாகம் தொடர்புகொண்டுள்ளது. ஆனால், அவர்களின் வாகனமும் வருவதற்குத் தாமதமாகியுள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தில் அழுத்தம் குறைந்ததில் ஆறு கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மற்ற 62 நோயாளிகள், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டனர்.
இந்த மருத்துவமனையில் கடந்த சில நாள்களாகவே ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்படுகிறது.
இதற்கிடையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகள் மாநிலத்தில் எவ்வளவு காலம் தொடரும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக, மாநில அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: 800 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் மாயம்: அதிர்ச்சியில் ஊழியர்கள்