திபு: அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த 10 நாட்களில் கடத்தப்பட்ட 6 சிறுமிகளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மாநில போலீசார் மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், திபு காவல்நிலையத்தில் டிச.8ஆம் தேதி 16 வயது சிறுமியை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யபட்டு, தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது சிறுமியை ஹரியானாவில் உள்ள ஃபதேஹாபாத் பகுதியில் இருந்து மீட்டு கடத்தலில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தோம்.
அதன் பிறகு போகஜன் காவல் நிலையத்தில் நான்கு சிறுமிகளை காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரில், போகஜன் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு சிறுமிகளையும், நாகாலாந்து மற்றும் டின்சுகியாவில் உள்ள திமாபூர் ரயில் நிலையத்தில் இருந்து தலா ஒரு சிறுமியையும் மீட்டோம். மற்றொரு 14 வயது சிறுமி ராஜஸ்தானில் உள்ள ஜுன்ஜுனுவில் இருந்து மீட்கப்பட்டார்.
இதேபோல் கடந்த 10ஆம் தேதி பகாலியா காவல்நிலையத்தில் மேலும் ஒரு சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் உள்ள 33 வயது நபருக்கு திருமணம் செய்து கொள்ள அந்த சிறுமி 1.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு, கடத்தலில் தொடர்புடைய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயற்சி' - சிக்கிய 2 இலங்கைப் பெண்கள்