டெல்லி: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2020ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, 2021-22ஆம் ஆண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், வழக்கு இன்று(டிச.2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கொடுத்த இடைக்கால உத்தரவின்படி இந்தாண்டும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரம், 15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும், 16ஆவது நாள் காலியாக உள்ள இடங்களின் விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்து, அந்த இடங்களை மத்திய அரசு அனுமதியுடன் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: தூக்கமின்மையை போக்கும் "ஸ்மார்ட் தலையணை" - மாணவரின் சூப்பர் கண்டுபிடிப்பு!