தெலங்கானா: ரங்காரெட்டி மாவட்டம், மீர்பேட் பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருபவர், மாணவி பூஜிதா. இவர், பள்ளியில் மதிய உணவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி அன்று மதிய உணவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவினை உட்கொள்வதற்காக மாணவி சென்றுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு, அதனை கீழே கொட்டியுள்ளார். இதையறிந்த ஆசிரியர்கள், மாணவியை பள்ளிக்கு வரக்கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மறுநாள் பள்ளி செல்வதற்கு முன்பு, பூஜிதா தனது தாயுடன் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதில், அசுத்தமான உணவை கொட்டியதால் ஆசிரியர்கள் தன்னை பள்ளியில் இருந்து நீக்குவதாகவும், தன்னை பள்ளிக்கு வரக்கூடாது என கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.
மாணவியின் புகார் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மகேந்தர் ரெட்டி, கூடுதல் உதவி ஆய்வாளர் திருப்பதையாவை, மாணவியுடன் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். மேலும் நடந்தது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் சமையல் அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து கூடுதல் உதவி ஆய்வாளர் திருப்பதையா கூறுகையில், ’’மாணவி கூறியது உண்மை. பள்ளியில் அழுகிய காய்கறிகள் மற்றும் பூச்சிகள், கற்கள் உள்ள அரிசி போன்றவை சமையலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவை பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, ஆய்வாளர் மகேந்தர் ரெட்டி மற்றும் கூடுதல் உதவி ஆய்வாளர் திருப்பதையா மாணவியின் மன உறுதியையும், புகார் அளிக்கும் தைரியத்தையும் பாராட்டினர்.
இதையும் படிங்க: பெண் போல் நடித்து திருமண மோசடி.. ரூ.21 லட்சத்தை ஆன்லைன் கேமில் இழந்த நபர்!