ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் ஒருங்கிணைந்து குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணி என களம் கண்டன. அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது.
எப்போதும் போல, ஜம்முவில் பெரும்பாலான பகுதிகளை பாஜகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் பிராந்திய கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தின.
தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்து அம்மாநில தேர்தல் அலுவலர் கே.கே. சர்மா கூறுகையில், "மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தலில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.
பள்ளத்தாக்கு பகுதியில் 30 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றது வரவேற்கத்தக்க ஒன்று. வாக்குப்பதிவை சீர்குலைக்க சிலர் முயற்சித்ததால் இணையசேவை துண்டித்தோம். 4ஜி சேவை மீண்டும் வழங்கப்படும். வேட்பாளர்களின் பாதுகாப்பை கருதி சில இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது" என்றார்.