லக்னோ: உத்தர பிரதேசம் பிரதாப்கர் மாவட்டம் சக்தல் கிராம பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 12), இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை உட்கொண்ட மாணவர்களுக்கு படிப்படியாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 12 ) மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் (ஜூலை 13) சிலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 15) காலை வரை குறைந்தது 30 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் 5 முதல் 11 வயது உடைய குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
மொத்தம் 49 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தாசில்தார், கிராம தலைவர் உள்பட அதிகாரிகள் சக்தல் கிராமத்தின் சுஹாக்புரா பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளதை அடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, வாந்தியும் ஏற்பட்டுள்ளதாக குழந்தை நல மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, துணை தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில்,"பள்ளியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை சேகரித்துவர குழு ஒன்றை அனுப்பியுள்ளோம். மழை காலத்தில், தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம். சேகரிப்படும் மாதிரிகளை சோதனை செய்த பிறகே, மாணவர்களுக்கு எதனால் உடல்நல குறைவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும்" என்றார்.
இதையும் படிங்க: ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது