இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 76 ஆயிரத்து 766 பேர் கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 422 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 79 ஆயிரத்து 682ஆக உள்ளது. இதுவரை 141 கோடியே 42 தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது.
83 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 57 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
நாட்டில் ஒமைக்ரான் நிலவரம்
நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையான 422இல் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து 130 பேர் மீண்டுள்ள நிலையில், ஒமைக்ரான் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.
தடுப்பூசி திட்டம் விரிவாக்கம்
ஒமைக்ரான் பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், ஒமைக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி மூன்றாம் தேதி முதல் தடுப்பூசியும், முன்களப் பணியாளர்கள் மூத்த குடிமக்களுக்கு(60 வயதுக்கு மேற்பட்டோருக்கு) ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Biryani: பிரியாணி மீது சென்னை மக்களுக்கு அப்படி என்ன காதல்?