ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாநில டிஜிபி உமேஷ் மிஸ்ரா தலைமையில் நேற்று (ஜனவரி 16) குற்ற சம்பவங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப்பின் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நாட்டிலேயே பாலியல் குற்றங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன. ஆனால், உண்மையில் மத்திய பிரதேச மாநிலமே முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாலியல் வழக்குகளில் 41 விழுக்காடு வழக்குகள் போலியானவை. தேசிய அளவில் ஒப்பிடுகையில் 8 விழுக்காடு வழக்குகள் பொய்யான தகவல் மூலம் பதியப்படுகின்றன. மக்களின் உயிர் காக்கும் நோக்கோடு மாநில காவல்துறை செயல்படுகிறது.
போக்சோ வழக்குகளில் போலீசார் விரைவான நடவடிக்கை எடுத்து முழுமையான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். 2022 ஆம் ஆண்டு இதுபோன்ற 5 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 209 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புகார் மீது எந்த ஒரு தடையுமின்றி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு ராஜஸ்தான் அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான முடிவுகளை அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், 30.5 சதவீத பாலியல் வன்புணர்வு வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டன. இது 14.4 சதவீதமாக குறைந்துள்ளது. பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த விமர்சனங்களை முன்னறிவித்தாலும், தடையில்லா பதிவு என்ற கொள்கையை புறக்கணிக்க நினைக்காமல், அதை மேலும் வலுப்படுத்த முயற்சித்து வருகிறோம்.
எப்ஐஆர் பதிவு செய்யாத 18 வழக்குகளில் அதிகாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாலியல் வன்புணர்வு வழக்குகளில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் தண்டனை சதவீதம் 47.9 ஆகும், இது தேசிய அளவிலான தண்டனை சதவீதமான 28.6 விட மிக அதிகம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சாப் போலீசாரால் ஓராண்டாக தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி கைது