டெல்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms -ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு 233 மாநிலங்களவை உறுப்பினர்களில் 226 பேரின் சொத்து மதிப்பு, குற்ற வழக்குகள் மற்றும் இதர பின்னணி விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "233 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில் ஒரு இடம் காலியாக உள்ளது. இரண்டு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரம் கிடைக்கப்பெறவில்லை. ஜம்மு காஷ்மீரின் நான்கு இடங்கள் வரையறுக்கப்படவில்லை. அந்த வகையில் 226 உறுப்பினரின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
226 ராஜ்யசபா எம்.பி.க்களில் 197 பேர் (87 சதவீதம்) கோடீஸ்வரர்கள், அவர்களில் ஒரு எம்.பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.79.54 கோடி ஆகும். 226 ராஜ்யசபா எம்.பி.க்களில் 71 பேர் மீது (31 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் உள்ளன. 37 பேர் மீது (16 சதவீதம்) கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
மேலும், 2 எம்.பி.க்கள் மீது கொலை தொடர்பான வழக்கு (ஐபிசி பிரிவு 302), 4 எம்.பி.க்கள் மீது கொலை முயற்சி தொடர்பான வழக்கு (ஐபிசி பிரிவு 307) பதியப்பட்டுள்ளது. மேலும் 4 எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த 4 எம்.பி.க்களில் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு (ஐபிசி பிரிவு 376) உள்ளது என்றும் தேர்தல் பிரமாணப் பத்திரம் வாயிலாக தெரியவந்துள்ளது.
மாநில வாரியான விவரங்கள்: உத்தரப்பிரதேசத்தில் இருந்து 31 ராஜ்யசபா எம்.பி.க்களில் 7 பேர் (23 சதவீதம்) , மகாராஷ்டிராவில் 19 பேரில் 12 பேர் (63 சதவீதம்), தமிழ்நாட்டில் உள்ள 18 எம்.பி.க்களில் 6 பேர்(33 சதவீதம்) , மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 பேரில் 3 பேர் (19 சதவீதம்), கேரளாவைச் சேர்ந்த 9 பேரில் 6 பேர் (67 சதவீதம்) மற்றும் பிகாரைச் சேர்ந்த 16 ராஜ்யசபா எம்.பி.க்களில் 10 பேர் (63 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன எனப் பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!