குஜராத்: பத்து நாட்களுக்கும் மேலாக அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த பிப்பர்ஜாய் புயல் நேற்று(ஜூன் 15) மாலை கரையைக் கடக்கத் தொடங்கியது. பாகிஸ்தானின் கராச்சிக்கும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் இடையே ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையைக் கடக்க ஆரம்பித்தது. அப்போது, மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயலின் கண் சுமார் 50 கிலோமீட்டர் விட்டம் கொண்டது. இது மணிக்கு 13 முதல் 14 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேறியது. இதனால், புயலின் கண் பகுதி கரையை கடக்க நள்ளிரவு ஆனது. புயலின் கண் பகுதி கரையை நெருங்கியபோது மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் சுறாவளிக்காற்று வீசியது.
புயல் காரணமாக குஜராத்தில் கடல் கொந்தளிப்போடு காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. இதனால், கரையோர கிராமங்களில் கடல்நீர் உட்புகுந்தது. கடல் சீற்றத்தால் கடலோரப்பகுதிகளில் மிகுந்த சேதம் ஏற்பட்டது.
புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது, குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. துவாரகா மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாநிலம் முழுவதும் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால், சுமார் 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் 22 பேர் காயமடைந்தனர். 23 விலங்குகள் பலியாகின. வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. மாண்ட்வி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, "மிக மோசமான புயலான பிப்பர்ஜாய் கரையைக் கடக்க நேற்று நள்ளிரவு வரை ஆனது. புயல் கரையைக் கடந்தபோது, பலத்த காற்று வீசியது. புயல் கரையைக் கடந்தாலும், இன்று குஜராத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அதன் பிறகு மழை மற்றும் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும்" என்றனர்.
முன்னதாக கடலோர கிராமங்களில் இருந்து சுமார் 94,000 மக்கள் நிவாரண முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதால் பெரிதளவில் உயிர்சேதம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், புயல் சேதம் குறித்து மாநில அரசு மதிப்பிட்டு வருகிறது. அதன் பிறகே முழு விவரங்கள் தெரியவரும். புயல் காரணமாக குஜராத் மாவட்டத்தில் சுமார் 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.