நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் நகரில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்ப மேளாவில் புனித நீராடினர். முன்னதாக கும்பமேளாவில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பக்தர்களிடம் எடுக்கபட்ட சோதனையில் இரண்டாயிரத்து 167 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னதாக, ‘ஹர் கி பைரி’ என்ற படித்துறையில், பல்லக்கில் எடுத்து வரப்பட்ட சாமி சிலைகளுடன் துறவிகள் புனித நீராடியும், பக்தர்கள் வேறு படித்துறைகளில் நீராடியும் தரிசித்து வந்தனர். ஆனால் நேற்று (ஏப்.14) ஒரே நாளில் சுமார் 10 லட்சம் பேர் புனித நீராடியதாகவும, நடனமாடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஐந்து நாள்களில் ஆயிரத்து 701 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மட்டுமே சுமார் 48 லட்சம் பேர் திரண்டதால் கரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.