ஜெய்ப்பூர் : 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 199 தொகுதிகளுக்கு நாளை (நவ. 25) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கரன்பூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 34 தொகுதிகள் பழங்குடியினருக்கும் மற்றும் 141 தொகுதிகள் பொதுப் பிரிவினர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (நவ. 25) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமாக மாநிலம் முழுவதும் 52,139 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச் சாவடிகள் உட்பட 50% வாக்குச் சாவடிகள் காணொளி அமைக்கப்பட்டு இணையதளம் மூலமாக நேரடியாகக் கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 1.70 லட்சம் காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், சசாஸ்திர சீமா பால் (மத்திய பாதுகாப்புப் படை), ரயில்வே பாதுகாப்புப் படை, உள்ளூர் காவல் துறையினர் மற்றும் வெளி மாநில காவல் துறையினர் உட்படப் பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1300 அதிவிரைவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தேர்தல் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கும் போது, தேர்தலுக்காகக் கடந்த 6 வாரங்களில் 65000 குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட விரோதமாக வைத்து இருந்த 491 துப்பாக்கிகள் மற்றும் 989 கூர்மையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் 276 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தரப்பில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது அதற்கு நிகராக பாஜக தரப்பிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!