ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ருஷிகொண்டா கடற்கரை உள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் கொண்ட குழுவும், தெலங்கானா செகந்திராபாத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கொண்ட குழுவும் குளிப்பதற்காக இந்த கடற்கரைக்கு வந்துள்ளனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த குழு, இன்று (ஜனவரி 2) மதியம் கடற்கரைக்கு வந்துள்ளனர். எட்டு பேர் கடலில் விளையாடிக்கொண்டிருந்தபோது, மூன்று பேர் ஒரு பெரிய அலையில் சிக்கி ஆழ்கடலுக்குள் மூழ்கியுள்ளனர்.
இரு உயிர்களைக் காவு வாங்கிய அலை
பின்னர், கடற்கரையில் இருக்கும் உயிர் காப்பாளர்கள், சி.ஹெச். சிவா என்னும் இளைஞரை மீட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், காணாமல் போன கே. சிவா, முகமது அஸீஸ் ஆகியோரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்றது.
இதேபோன்று, கடற்கரையின் மற்றொரு பகுதியில் ஒடிசாவில் இருந்த வந்த ஐந்து மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது வந்த பெரிய அலையில் சிக்கி, அனைவரும் கடலில் மூழ்கினர். உயிர் காப்பாளர்கள் நால்வரை பத்திரமாக மீட்டு கரை திரும்பினர்.
ஆனால், மாணவி சுமித்ரா திரிபாதி கரை திரும்பாத நிலையில், சிறிதுநேரத்திற்கு பின் அவரது உடல் கரை ஒதுங்கியுள்ளது.
நீச்சல் வல்லுநர்கள், உயிர் காப்பாளர்கள் ஆகியோர் மீதமுள்ள இரண்டு தெலங்கானா இளைஞர்களைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை கடற்படையிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைவுப் படகுகள், ஹெலிகாப்டர்களை கொண்டு தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உயிரிழந்த இருவரின் உடல்கள் உடற்கூராய்விற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.