பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த பிரீத்தம் (30), கிருத்திகா (28) ஆகியோர் பணியாற்றினர்.
இருவரும், பணிமுடிந்து தங்களது இருசக்கர வாகனத்தில் எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் நேற்று (செப். 14) இரவு சென்றுகொண்டிருந்தனர். அதே மேம்பாலத்தில் அதிக வேகமாக வந்த கார் ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றுள்ளது.
தூக்கி வீசப்பட்டனர்
அப்போது, அந்த கார் இருச்சக்கர வாகனத்தில் மோதியதில், அவர்கள் இருவரும் மேம்பாலத்தில் (30 அடி உயரம்) இருந்து கீழே உள்ள நெடுஞ்சாலைக்கு தூக்கி வீசப்பட்டனர். அந்த காரும் மேம்பாலத்தில் மோதி கடும் சேதத்திற்கு உள்ளானது.
இருசக்கர வாகனத்தில் சென்ற பிரீத்தம், கிருத்திகா இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த நிதீஷ் (23) காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இருவரின் உடலும் செயின்ட் ஜான் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.
சிசிடிவி காட்சிகள்
இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதிவேகமாக வந்த மேம்பாலத்தில் முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். தற்போது, விபத்து ஏற்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன,
கார் ஒட்டுநர் நிதீஷ் மீது 279, 304 (a) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த நைஜீரியர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை!