டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்காண கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜும்மா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி, ஜும்மா நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து பேர் மண்ணுக்குள் புதையுண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜும்மா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். மேலும் ஐந்து பேர் மண்ணுக்குள் புதையுண்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்த மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். மண்ணில் புதைந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். தற்போது பேரிடர் மீட்புக்குழுவினர் மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் கனமழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!