நிர்மல்: அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பதின்பருவத்தினர் மாரடைப்பால் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம், மத்திய பிரதேசத்தில் 12 வயது பள்ளி மாணவன் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான். பள்ளிப் பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் இறந்தது சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதேபோல மற்றொரு சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த முத்யம் என்ற 19 வயது இளைஞர், தனது உறவினரின் திருமணத்திற்காக தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பர்தி கிராமத்திற்கு சென்றுள்ளார். நேற்று(பிப்.25) இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞர் நடனமாடியுள்ளார்.
பாடலுக்கு ரசித்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். மூச்சு பேச்சில்லாமல் கிடந்த இளைஞரை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இளைஞர் திடீரென மயங்கி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வீடியோ: ஊருக்குள் புகுந்த காட்டு யானை - விரட்டியடித்த விவசாயிகள்