டெல்லி: 2022ஆம் ஆண்டு நாடு முழுவதும் அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் 165 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களுக்கு 21 நீதிபதிகள், தெலங்கானாவுக்கு 17 நீதிபதிகள், ஆந்திராவுக்கு 14 நீதிபதிகள், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு 16 பேர், டெல்லிக்கு 17 நீதிபதிகள் உள்பட நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் 165 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, அலகாபாத், மும்பை, கொல்கத்தா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், கர்நாடகா ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு 38 கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் உள்ள 2 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை, தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், கவுகாத்தி, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய 8 உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக'' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதித்துறையின் டெலி-சட்டம் மூலம் 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 755 மாவட்டங்களின் கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெலி - சட்டத்தின் மூலம் காணொலி மற்றும் நேரடியாகவும் ஏறத்தாழ 17ஆயிரம் பேருக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலி - சட்டம் குறித்து பொது மக்கள் அறியும் வகையில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வாகன ஊர்வலம், வானொலி மற்றும் காணொலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இ-நீதிமன்றம் திட்டத்தில், இதுவரை ஆயிரத்து 668 கோடியே 48 லட்சத்தை அரசு விடுவித்துள்ளதாகவும், 18 ஆயிரத்து 735 மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதாகவும் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா காலகட்டங்களில் நீதிமன்றங்களில் 2 கோடிக்கும் அதிகமான காணொலி விசாரணைகள் நடைபெற்றதாகவும், இதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசா, குஜராத், கர்நாடகா, ஜார்க்கண்ட், பாட்னா, மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரலையாக மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கங்கையில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணி தீவிரம்...