காசர்கோடு (கேரளா): கேரளா மாநிலம், காசர்கோட்டை சேர்ந்தவர் ஹாஷிம். வட மாநில கிராமம் ஒன்றில் வசித்து வந்த ஹாஷிம்.கடந்த 2005ஆம் ஆண்டு, 7 வயதாக இருக்கும்போது கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது பெற்றோரை பிரிந்து கேரளா வந்துள்ளார். 7 வயதான ஹாஷிம் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.
இவரைக் கண்ட 15 வயதான ஷாஜிர், காசர்கோடு கன்ஹாங்காட்டில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், ஷாஜிரின் பெற்றோர் அப்துல் கரீம் மற்றும் தாய், ஹாஷிமை வளர்த்து வந்தனர். ஹாஷிமை கேளராவில் படிக்க வைத்தனர். ஹாஷிற்கு வளைகுடா நாட்டில் வேலை கிடைத்து அங்கு பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், தற்போது கேரளா வந்துள்ள அவர், தன் சொந்த பெற்றோரை காண விரும்பி உள்ளார். 23 வயதான ஹாஷிம், பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஹாஷிம் கூறுகையில், "நான் வசித்த வட மாநில கிராமத்தில் அங்கு இருந்தவர்கள் புடவைகளுக்கு எம்பிராய்டரி செய்து வந்தனர். அந்த கிராமத்தில் கோயில் மற்றும் மசூதி இருந்தது. என் பெற்றோரின் பெயர் ஜசின் முகமது - மர்ஜினா என நினைவிருக்கிறது. இதை தவிர்த்து எந்த மாநிலம், கிராமம் என எதுவும் நினைவில் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "எனக்கு பெற்றோர் இல்லாத குறை இருந்ததே இல்லை. ஷாஜிரின் பெற்றோர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். இருப்பினும் என் சொந்த பெற்றோரை பார்க்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: கைகொடுத்த ஃபேஸ்புக்: 1 ஆண்டுக்குப் பின் பெற்றோருடன் இணைந்த மகன்!