நாட்டின் சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தை திட்டமிடும் வகையில் நிதிக்குழு உருவாக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிதியை எப்படி பங்கீடுவது குறித்து இக்குழு தீர்மானிக்கும். இந்நிலையில், 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான நிதி பங்கீட்டை முடிவு செய்யும் 15ஆவது நிதிக்குழு தனது அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு, மாநிலத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனாவால் மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ள நிலையில், என்.கே. சிங் தலைமையிலான குழு அறிக்கையை சமர்பித்துள்ளது.
கரோனாவக்கு பிறகான காலத்தில், பொது சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் எனவும் நிதிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. "கரோனா காலத்தில் நிதிக்குழு" என்ற தலைப்பில் நான்கு தொகுதிகள் அடங்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையில் முதல்முறையாக, நாட்டில் நிலவும் சுகாதார நிலை குறித்து தனியாக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஜிடிபியில் 2.1 விழுக்காட்டு செலவினத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என என்.கே. சிங் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பாதுகாப்புத் துறைக்கு குறைபாடுகள் ஏற்படாதவாறும் உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என மத்திய அரசு கோரியிருந்தது.
இதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உள்ள நிதி பங்கீட்டிலிருந்தோ அல்லது வரியிலிருந்தோ கூட நிதியை பயன்படுத்தலாம் என மத்திய அரசு ஆலோசனை வழங்கியிருந்தது. மத்திய அரசின் கோரிக்கைகளுக்கு ஏற்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.