நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாமல் கரோனா நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் கரோனா நோயாளிகளை புதைக்கக் கூட இட வசதியில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் அலட்சியம்
கோவிட் இறப்பு எண்ணிக்கையை மறைத்ததாக மத்தியப் பிரதேச அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தூர் நகரில் உள்ள சுடுகாடு ஒன்றில், கடந்த மாதம் 1500க்கும் மேற்பட்டோர் தகனம் செய்யப்பட்டனர். கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அன்றாட இறப்புகளை தெரிவிப்பதில் நகர சுகாதாரத் துறை அலட்சியம் காட்டி வருகிறது.
ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு
நாள்தோறும் பதிவாகும் கரோனா பாதிப்புகளை வெளியிடும் சுகாதாரத்துறை இறப்பு எண்ணிக்கையையும் வெளியிடுகிறது . ஆனால் சுடுகாட்டு காட்சிகளைப் பார்க்கும் போது, அந்த பதிவு முற்றிலும் தவறானதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஈடிவி பாரத் ஊடகம் சார்பில் பஞ்ச்குயா முக்திதம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள சுடுகாட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றும் பூனம் பாபா நாள்தோறும் பல உடல்களை தகனம் செய்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏப்ரல் 30 அன்று, 35 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அவற்றில் 20 கரோனா நோயாளிகளின் உடல்கள்" என்றார். ஆனால் அன்று சுகாதார துறை வெளியிட்ட கரோனா அறிக்கையில், ஏழு கோவிட் மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
மறைக்கப்படும் கரோனா மரணங்கள்
மேலும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 500 கரோனா நோயாளிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் இதற்கு முரணாக உள்ளது. ஏப்ரல் 30 வரை சுமார் ஆயிரத்து 28 பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈ டிவி பாரத் சார்பில் சுகாதார துறை உயர் அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்கள் அந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் தெரிவிக்காமல் நழுவுகின்றனர்.