ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள காகிதி மத்திய சிறையில் சிறை கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 15 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதுகுறித்து பர்சுதி போலீசார் தரப்பில், "2019ஆம் ஆண்டு காகிதி மத்திய சிறையில் இரண்டு கும்பல் மோதிகொண்டன. இந்த வன்முறையில், மனோஜ் குமார் சிங் உள்பட இரண்டு கைதிகள் படுகாயமடைந்தனர்.
இதில் மனோஜ் குமார் சிங் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக மாநில காவல்துறை தலைமை இயக்குநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில், கொலையில் ஈடுபட்ட 15 பேர் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை), 120பி (குற்றச் சதி) ஆகியவையின் கீழும், 7 பேர் மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று (ஆக 18) தீர்ப்பு வழங்கியது. அதில், 15 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகள் ஜாமீனில் சென்று தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு தள்ளுபடி