பிரயாக்ராஜ் : உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் ஆகியோர் நடுரோட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அடிக் அகமது. ரவுடிசம், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட வந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியி சேர்ந்து அரசியல்வாதி ஆனார். 5 முறை எம்.எல்.ஏ., ஒரு முறை எம்.பி.யாக பதவி வகித்து உள்ளார். அடிக் அகமது மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அடிக் அகமது மற்றும் அவரது சகோதர் அஸ்ரப் உள்ளிட்டோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருந்து கொண்டே அடிக் அகமது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பாலுக்கு, சிறையில் இருக்கும் அடிக் அகமதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டது. முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு உமேஷ் பாலை, அடிக் அகமதுவின் கும்பல் கடத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது.
இதனால் உமேஷ் பாலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மர்ம நபர்களால் உமேஷ் பால் பொது வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அடிக் அகமதுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டடது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், உமேஷ் பால் படுகொலை சம்பவம் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், வழக்கறிஞர் உமேஷ் பால் கடத்தல் வழக்கில், அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உமேஷ் பால் கொலை வழக்கில் இருவரை துப்பாக்கிச் சூடு நடத்திய கொன்ற போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் அடிக் அகமதுவின் மகன் ஆசாத்திற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் அறிவிக்கப்பட்டது. கொலை வழக்கு தொடர்பாக ஆசாத்தை போலீசார் தேடி வந்தனர். தேடப்படும் குற்றவாளியாக ஆசாத்தை அறிவித்த போலீசார் அவரது தலைக்கு 5 லட்ச ருபாய் ரொக்கம் தருவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஆசாம் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆசாத் உடல் பிரேதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஆசாத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஏப் 15) இரவு அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
ரத்த வெள்ளத்தில் அடிக் அகமது மற்றும் அஸ்ரப் துடிதுடித்து உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் சரணடைந்த நிலையில் அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பேரும் பத்திரிக்கையாளர்கள் பாணியில் அடிக் அகமது மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரிய வந்தது.
3 பேரிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டை, கேமிரா உள்ளிட்ட அனைத்தும் போலி என்று தெரியவந்ததாக போலீசார் கூறினர். அடிக் அகமது, அஸ்ரப் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வீதிகளில் மக்கள் கூட்டமாக செல்ல போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் மக்களை வெளியே செல்லுமாறும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரவுடிச தாக்குதல்களை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோர் உடல்கள் இறுதி சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பீகாரில் சகோதரிகள் ஆணவக் கொலை?: தாய் கைது, தந்தை தலைமறைவு