தானே: தோல் கழலை நோயால், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் இதுவரை 14 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நவ்ரேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானே மாவட்டத்தில் தோல் கழலை நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், நோய் மேலும் பரவாமல் தடுக்க கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பர்நாத், ஷாஹாப்பூர், பிவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய் தாக்கம் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் இதுவரை 5,017 கால்நடைகளுக்குத் தடுப்பூசி (Anti LSD vaccine) போடப்பட்டுள்ளதாகவும், தானே மாவட்டத்திற்கு மேலும் 10,000 டோஸ் தடுப்பூசி தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.