உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் கிராமத்தில் 233 பேருக்கு "ஹெபடைடிஸ் சி" வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 129 பேருக்கு ஹெபடைடிஸ் சி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய அஸ்மோலி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொறுப்பாளரான மருத்துவர் மனோஜ் சவுத்ரி, ஹெபடைடிஸ் சி வைரஸ் பெரும்பாலும் ரத்தத்தின் வழியாகவே பரவும் என்றும், கல்லீரலை பாதிக்கும் மோசமான தொற்று என்றும் தெரிவித்தார். இதையடுத்து, ராம்நகர் கிராமத்தில் சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
கிராமத்தில் தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும், ஹெபடைடிஸ் சி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், நிலத்தடி நீர் மாசுபாடு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதாரண வாக்குவாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!