ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜூன் 25ஆம் தேதி ‘பெடல் ஃபார் பீஸ்’ (Pedal for Peace) என்ற சைக்கிளிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பாட்நகர், ஏசிஎஸ் ஹோம் துறையைச் சேர்ந்த ஆர்கே கோயல், டிஜிபி தில்பக் சிங், ஏடிஜிபி, ஜம்மு காஷ்மீரின் எஸ்ஜிஎம் கில்லானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிலர் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காத வண்ணம் எழுந்து நிற்காமல் இருந்து உள்ளனர். இது தொடர்பான தகவல் செய்திகளாக வெளி வந்தது. இந்த நிலையில், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் அமைதிக்கு ஆபத்து என கருதிய ஸ்ரீநகர் காவல் துறை, 12 பேர் மீது 107/151 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளது.
அது மட்டுமல்லாமல், வழக்குப் பதிவு செய்யப்பட்ட 12 பேரையும் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும், தேசிய கீதத்தை குறிப்பிட்ட சிலர் அவமதிக்கும்போது, அதனை தடுக்கத் தவறிய காவல் துறையினர் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், தங்களது கடமையை செய்யத் தவறியதாக ஸ்ரீநகர் காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக ஸ்ரீநகர் காவல் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் தேசிய கீதத்திற்கு தகுந்த மரியாதை அளிக்காததால் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக தகவல்களை பகிர்ந்து உள்ளார். இதன்படி, தேசிய கீதத்தை இசைக்கும்போது அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக எழுந்து நிற்காமல் சிலர் இருந்ததை சரி செய்யத் தவறியதாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என்றும், கைது செய்யப்பட்ட 12 பேர் ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக குஜராத் மாநிலத்தின் பரூச்சில் நடைபெற்ற திருமண நிகழ்வின்போது, 11 பேர் கொண்ட குழுவினர் சேரில் அமர்ந்த நிலையிலும், கேலியாகவும் தேசிய கீதத்தை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில், தேசிய கீதத்தை அவமதித்ததாக 2 பாஜக பிரமுகர்கள் உள்பட 11 பேர் மீது நகரின் பி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். அதேநேரம், இவர்களில் இருவர் பாஜக பிரமுகர்கள் என்பதை பரூச் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் முஸ்தபா கோடா உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு.. ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..