சித்தூர் (ஆந்திரப் பிரதேசம்): ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நன்றாகப் படிக்கும் பள்ளியில் முதலிடம் பெறும் மாணவி எனத் தெரிய வருகிறது.
இந்தநிலையில், நேற்று (மார்ச் 23) மாணவி திடீரென தற்கொலையால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அம்மாணவியின் உடலை மீட்ட காவல்துறையினர், அங்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றைக் கைப்பற்றியதாக தெரிவித்தனர். அந்த கடிதத்தில் மாணவி, அவருக்கு பள்ளியில் நடந்த நிகழ்வு குறித்து கூறியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலும் கூறுகையில், மாணவி நன்றாக படித்து ஒவ்வொரு முறையும் முதல் மதிப்பெண் எடுத்துவந்ததால், அவர் உடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கு பொறாமை இருந்துள்ளது. அந்த மாணவியின் தந்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக உள்ளவர்.
மேலும், அந்த மாணவியின் தந்தை தனது மகள் மட்டுமே பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் எனவும்; வேறு யாரும் முதலிடம் பெறக்கூடாது எனவும் கூறியும் பள்ளி ஆசிரியரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் ஒருவர், நன்றாகப் படித்து வந்த மாணவி மிஸ்பாவுக்கு மாற்றுச்சான்றிதழ் அளித்து, பள்ளியை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலையால் உயிரிழந்தார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சித்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சேகர், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் தாளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: உயிர் காப்பான் போலீஸ்.. ரயில் முன்பாய்ந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்!