கரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கிவருகிறது. கரோனாவுக்கு அடுத்தடுத்து அன்புக்குரிவர்கள் பலியாகுவது பெருந்துயரை அளிக்கிறது. இவ்வளவு பிரச்சினைக்கு நடுவிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்பதுபோல அவ்வப்போது, சில நம்பிக்கையூட்டும் சம்பவங்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தைச் சேர்ந்த வயதான தம்பதியர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த சம்பவம்தான் அது.
105 வயதான தெஹ்னு சவான், அவருடைய மனைவி 93 வயதான மோடாபாய் ஆகிய இருவரும் 10 நாள்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இத்தம்பதிக்கு கடந்த மாதம் கரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று அவர்களது பிள்ளைகள் இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அதில், கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வயதான இத்தம்பதிக்கு கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், தீவிர காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, லட்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும், அங்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டது.
கரோனா பாதிப்பு மோசமாக உள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில், 10 நாள்கள் ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த வயதான தம்பதியர் முழுமையாக கரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.