கோட்டயம்: கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பது புகழ்பெற்ற வாசகம். 40, 50 வயதுகளில் கல்வி கற்பதையே வியப்பாகப் பார்க்கும் நமக்கு 104 வயதுடைய மூதாட்டி ஒருவர் படித்து, தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார் என்று கூறினால் நம்ப முடிகிறதா? அதுவும் மாவட்டத்தில் முதலிடம்...!
முதல் மதிப்பெண்
ஆம், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அயர்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டியம்மா. 104 வயதான இவர், கணிதம், மலையாளம் போன்றவற்றை பிரதான பாடங்களாகக் கொண்ட எழுத்தறிவுத் தேர்வை எழுதினார். இதில், நூற்றுக்கு 89 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
கோட்டயத்தில் குட்டியம்மா உள்பட மொத்தம் 509 பேரும், அயர்குன்னம் பகுதியில் இருந்து ஏழு பேரும் எழுத்தறிவுத் தேர்வை எழுதினர். இவர்களில் அனைவரும் தேர்ச்சியடைந்த நிலையில், குட்டியம்மாதான் இவர்களுள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இதில், தேர்ச்சியடைந்தது மூலம், குட்டியம்மா நான்காம் வகுப்பில் சேர்ந்து தனது படிப்பைத் தொடரலாம்.
கற்றுக்கொள்வதில் ஆர்வம்
எழுதப் படிக்கவே தெரியாத குட்டியம்மா, இதுவரை பள்ளிக்கே சென்றதில்லை. தற்போது, ரஹானா என்ற ஆசிரியர் ஒவ்வொரு மாலையும் குட்டியம்மாவின் வீட்டிற்கு வந்து பாடம் கற்றுத் தருகிறார்.
இது குறித்து ரஹானா கூறுகையில், "குட்டியம்மா எழுத கற்றுக்கொண்டபோது மிகவும் உற்சாகமானார். அதேபோல், எதையாவது புதிதாகப் படிக்க வேண்டுமென்றால் அதை மிக ஆர்வமுடன் கற்றுக்கொள்வார்.
அவருக்குச் சிறிய பார்வை குறைபாடுதான் உள்ளதே தவிர பெரிய அளவிற்கு உடல்நிலை பிரச்சினை என்று ஏதுமில்லை. அவரால், வெளிச்சம் உள்ள இடத்தில் மூக்குக் கண்ணாடி இல்லாமலும் வாசிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
குட்டியம்மாவின் கணவர் 2002ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டதால், தற்போது தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்துவருகிறார்.
இதையும் படிங்க: இந்தியா 75 - காலனியாதிக்கத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த சிற்றரசி!