மலையாள ஆண்டின், கொல்லம்வர்ஷம் சிங்கம் மாதத்தில், ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாள்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கேரள மக்களாலும், அண்டை மாநில மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.
முதலமைச்சர் அறிவிப்பு
இந்நிலையில், மழை வெள்ளத்தினாலும், கரோனா தாக்கத்தினாலும் பொது மக்களின் பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு ஓணம் பண்டிகையை வழக்கமாக கொண்டாடும் வகையில் நிறைய சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் சுமார் 48.5 லட்சம் பேருக்கு தலா ரூ. 3,100 நல ஓய்வூதியமாக அரசு வழங்கியுள்ளது. அதற்காக ரூ. 1481.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
ரூ.1000 பரிசுத் தொகை
மேலும், பல்வேறு நலத்திட்ட ஓய்வூதிய திட்டங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு தலா ரூ. 1000 ஓணம் சிறப்பு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. 60 வயது முழுமையடைந்த பட்டியிலினத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தலா 1000 ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 576 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கரோனாவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சிறு வணிகர்களுக்கு மாநில அரசு ரூ. 5650 கோடி உணவு தொகுப்பையும் அறிவித்துள்ளது.