கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையிழந்துள்ளனர். தற்போது அவர்கள் புதிதாகப் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடிவருகின்றனர். இதனைப் பயன்படுத்தி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு திருட்டுக் கும்பல் வேலை தேடுபவர்களை அணுகி, புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றிவருகின்றது.
வேலை தேடுபவர்களிடம் ஆசைவார்த்தை கூறி, தங்களது நிறுவனத்தில் அதிக சம்பளம் வழங்குவதாகவும் கூறுகின்றனர். மேலும், விண்ணப்பக் கட்டணமாக தங்களது வங்கிக் கணக்கில் 10 ரூபாய் செலுத்துமாறும் கேட்கின்றனர்.
அத்தகைய ஒரு வழக்கில், பெங்களூரு ஹனுமந்தநகரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் இந்தத் திருட்டு கும்பலை அணுகியுள்ளார். அவர்கள், அப்பெண்ணிடம் ஒரு ஆள்சேர்ப்பு ஊழியர்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பின்னர், விண்ணப்பத்தை நிரப்பும்படி அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். மேலும், இது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பணியென்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய அப்பெண் உடனடியாக விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்துள்ளார். தொடர்ந்து, அப்பெண் திருட்டுக் கும்பலிடம் வங்கிக் கணக்கு விவரங்கள், சிவிவி எண் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு அப்பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 42 ஆயிரத்து 10 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்னதாக கோரமங்கலாவைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணிடமிருந்து ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாயும், மத்திகேரைச் சேர்ந்த அனுஷா என்ற பெண்ணிடம் 19 ஆயிரம் ரூபாயும் இந்தத் திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதேபோன்ற 10 பேரிடம் அந்தத் திருட்டு கும்பல் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.
இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் திருடிய இந்தத் திருட்டு கும்பலை பெங்களூரு காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும், வங்கிக் கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என காவல் துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஏழு கோடி ரூபாய் வரை மோசடி- நான்கு பேர் கைது!