வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்னேஷ் - சுரேகா (23) தம்பதி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணமான நிலையில், முதல் பிரசவத்திற்காக சுரேகா கடந்த திங்கட்கிழமை அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில், அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தைக்கு மட்டும் உடல் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மற்றொரு மகளைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் சுரேகா இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சுரேகா மருத்துவமனையில் தற்கொலை செய்துள்ளார். அப்போது உயிருக்குப் போராடிய அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எதற்கும் தற்கொலை தீர்வல்ல.