சென்னை: கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடு, முண்டக்கை மற்றும் சூரல்மலை போன்ற பகுதிகளில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.
இந்த பயங்கர நிலச்சரிவினால் அப்பகுதியில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் எனப் பல பேர் மாட்டிக்கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்புப்பணி வீரர்கள் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(ஜூலை 31) மதியம் சென்னை தி நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியிலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள எம்இஎஸ் ரீனா மேல்நிலைப் பள்ளியிலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்குப் பள்ளி மாணவ, மாணவியர்கள் அஞ்சலி செலுத்தினர். மொத்தம் 50 மாணவர்களுக்கு மேல் மெழுகுவர்த்தி ஏற்றி "pray for wayanad" என்று உயிரிழந்தவர்களுக்காக வருத்தத்தோடு அஞ்சலி செலுத்தினர்.