மயிலாடுதுறை: சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபிக் (55). இவர் அதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக பெட்டிக்கடை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில், அவரது கடை வாசல் முன்பு ரஃபிக் கழுத்துறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முதல் கட்ட விசாரணையில், முகமது ரஃபீக்கிற்கு அபுரோஜா கனி என்ற மனைவியும், இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி, மகன், மகள் ஆகியோருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பெட்டிக்கடையில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.