நீலகிரி: கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட நட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவர் நேற்று வழக்கம்போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வளர்ப்பு நாயை விரட்டி வந்த சிறுத்தை வீட்டினுள் புகுந்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக மணியை சிறுத்தை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவே, உடனடியாக மணியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுத்தை தாக்கியது குறித்து கீழ் கோத்தகிரி வனத்துறையினர் மற்றும் சோலூர் மட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.