கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான வாக்கில் லே-அவுட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியை ஒட்டி அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
இந்த நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வாடகைக்கு விடும் முறைகேடு நடைபெறுவதாக ஓசூர் சார் ஆட்சியர் திருமதி பிரியங்காவிற்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் சார் ஆட்சியர் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் அனைத்தையும் இடித்து அப்புறப்படுத்துமாறு ஓசூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று வாடகைக்கு விடுவதற்கு தயாராக உள்ள 20 மேற்பட்ட வீடுகளை ஓசூர் நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில், ஓசூர் வட்டாட்சியர் சின்னசாமி தலைமையிலான குழுவினர், ஜேசிபி வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.